பாமக செய்யும் அரசியல், ‘நாகரிகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியல்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயக்குமார் கருத்துக்கு பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெளிவாகப் பதில் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது. அதற்கேற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம். அந்த முடிவும் தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பு எடுப்போம்.
அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம்; வரவேற்போம். கெட்டது செய்தால் கடுமையாக எதிர்ப்போம். திமுக, அதிமுக இரண்டும் எங்களுக்கு வித்தியாசம் இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்திலும் திட்டங்களை வரவேற்றுள்ளோம், எதிர்க்கவும் செய்துள்ளோம். அப்படி திமுக ஆட்சிக் காலத்திலும் போராட்டங்களைச் செய்துள்ளோம்.
எங்களது அரசியல் நாகரிகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியல். இதில் பிரச்சனை, பிரிவினை ஏற்படுத்துவது, கொச்சைப்படுத்துவது சிலரைத் தூண்டிவிடுவது எல்லாம் எங்களது அரசியல் இல்லை. அதை நாங்கள் செய்யவும் மாட்டோம்” எனக் கூறினார்.