அண்மையாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. கடந்த வாரம் கொய்யாத்தோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், 'இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் இப்பொழுது எம்.எல்.ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்து உங்களுக்கு வீடுகளை தருவார்' என பேசியிருந்தார். இதேபோல், சில இடங்களில் திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றிவருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை தலைமை நன்கறியும். எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம். கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடலுடன் தயாராகி வருகிறேன். மக்கள் பணியாற்றி கட்சிக்கும், அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், “உறுதியாக அவரை அமைச்சராக்குவார்கள். ஐந்து ஆண்டுகாலத்திற்கு அமைச்சராக மாட்டேன் என தம்பியை உறுதியாகச் சொல்ல சொல்லுங்கள். அனைவரையும் பேசவைப்பது என்பது, அனைவரிடத்திலும் அவருக்கு ஆதரவு இருக்கிறது எதிர்ப்பு இல்லை என்பதை காட்டுவதற்காக இப்படி பேசவைப்பார்கள்” என்று தெரிவித்தார்.