நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகளை லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்குரல் உயர்த்தி வருகின்றன. இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளனர். ஆனால், மத்திய அரசு மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்தும், தவறான புள்ளி விபரங்களை கொடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டுகிறார் தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர்.
இதனைச் சுட்டிக்காட்டி, இந்த மரணங்களின் உண்மையை விளக்கவும், கரோனாவால் இறந்தவர்களின் உண்மை எண்ணிக்கையையும் அறிவித்து அவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என்பது குறித்தும் லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான கடிதத்தை லோக்சபா செயலாளரிடம் காங்கிரஸ் சார்பில் கொடுத்துள்ளார் மாணிக் தாகூர் எம்.பி.