Skip to main content

''முதல்வர் கண்டிக்க வேண்டுமே தவிர தவறை நியாயப்படுத்தக் கூடாது'' - காட்டமான வானதி ஸ்ரீனிவாசன்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

 "A leader should condemn and not justify wrongdoing" - Vanathi Srinivasan

 

இன்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், ''கடந்த வாரம் முதல் கோவை மாநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை என்றுதான் குடிநீர் வருகிறது. இதனால் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிப்பதற்காக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

குடிநீர் பிரச்சனை கோவை மக்களை அதிகமாக பாதிக்கின்ற காரணத்தினால் அதைப்பற்றி நான் அரசினுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரை அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் பேரவை தலைவர் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார். ஏனென்றால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையால் கோவை பகுதி மக்கள் பாதிக்கின்ற பொழுது இதைப்பற்றி அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்த்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக லாரிகள் மூலம் குடிநீரை வழங்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்வதற்காக தான் கேட்கிறோம். ஆனால், மக்கள் பிரச்சனைகளை எடுத்துப் பேசுவதற்கு கூட பேரவை தலைவர் அனுமதி அளிக்காதது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. அதன் காரணமாக இன்று வெளிநடப்பு செய்கிறோம்.

 

உங்களுடைய நண்பர் உள்துறை அமைச்சர், அவரோட பையன் நடத்துகிற ஐபிஎல் போட்டிக்கு நீங்கள் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கிண்டலாகப் பேசுகிறார் விளையாட்டுத்துறை அமைச்சர். அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு மந்திரியின் பையன்தான் தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்துக்கு தலைவர் என்பதை வசதியாக மறந்து விடுகிறார். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சபையில் உள்துறை அமைச்சரின் பையனைப் பற்றியெல்லாம் தேவை இல்லாமல் இங்கு பேசுகிறார்கள். இதேபோல் இவர்களை பற்றி வேறு மாநில சட்டமன்றத்தில் பேசுவதற்கு தெரியாதா. இதையெல்லாம் அவர்கள் கேட்டால் முதல்வர் இதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவர் செய்கின்ற தவறெல்லாம் அவர் கண்ணில் தெரியவில்லை போலிருக்கிறது. தவறு செய்தால் முதல்வர் கண்டிக்க வேண்டுமே தவிர தவறை நியாயப்படுத்தக் கூடாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்