அதிமுகவில் நிலவி வந்த இரட்டை தலைமை விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும், மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக் கட்சிகள் என்றால் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும் என்றும், இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான மோதல் போக்கு குறித்து விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.