தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடலூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர்.வி.எஸ். ரமேஷை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, "தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல, பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் உரிமை மீட்பு போராட்டம், நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், 10 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டம் என மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடிய கொள்கை வழியான கூட்டணி.
திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. சொல்வதை செய்கின்ற கூட்டணி நம்முடைய கூட்டணி. அடுத்து ராகுல்காந்தி தலைமையில் அமையப் போகிற மத்திய ஆட்சி நீட் தேர்வுக்கு முடிவுகட்டும். அடுத்து கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் திமுக அறிவித்துள்ளது. கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப்பட்டால் அனிதா போன்றவர்களின் மரணங்களுக்கு வேலை இல்லாமல் போகும்.
திராவிட இயக்கத்தினுடைய தாக்கம் இன்று தென் நாடு முழுக்க பரவியுள்ளது. அடுத்து வட மாநிலங்களிலும் பரவி வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் ராகுல் காந்தி தென்னாட்டில் வந்து போட்டியிடுகிறார். பத்திரிகை ஊடகங்களில் வரும் கருத்துக்கணிப்புகளை நம்பக்கூடாது. அவைகள் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள்.
தற்போது மக்கள் தெளிவாக முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கொத்தடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். மத்தியில் இருக்கும் மதவெறி, பதவி வெறி பிடித்த மோடி ஆட்சி அகற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், பாசிசம் அழிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் நாட்டை மீட்க வேண்டும் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று பொருள். பாஜக அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு, குறு, நடுத்தர, பெரிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வடமாநிலத்தில் பாஜகவினர் 'இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இதுதான் உங்களுக்கு கடைசி தேர்தல். இதற்குப் பிறகு தேர்தலே நடக்காது. நரேந்திர மோடி தான் நாட்டின் நிரந்தர பிரதமர்' என கூறி சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறார்கள்" என்றார்.