“ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம், அதில் தலையிடுவது மதக்கலவரத்தை தூண்டும் செயலாக அமையும்” என அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
நாகை அடுத்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்திருந்த அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வழிபாடு செய்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினார். பிறகு நாகூர் தர்கா அலங்கார வாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தகர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு பெருத்த நன்மை. பாஜக எங்களோடு கூட்டணியில் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது. அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம். ஆக இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் அது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு முதல்புள்ளி தான்" என்று தெரிவித்தார்.