கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். மேலும் அக்கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து இன்று (22.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சீமான் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். ஆனால் அவரது செயல்பாடுகள் தற்போது முரண்பாடாக உள்ளது. கட்சி நகர்வது முக்கியமில்லை. அது வெற்றியை நோக்கி நகர வேண்டும். விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லையென்றால் வெளியேறுங்கள். சீமான் கூறுகிறார். எனவே அவர் கூறியது போல் விருப்பமில்லாததால் வெளியேறுகிறோம்.
குறிப்பாக அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சைக் கண்டித்து நா.த.க.வில் இருந்து விலகுகிறோம். சீமான், ‘வந்தேறிகள்’ எனத் தொடர்ந்து பேசி வருவதால் எங்களால் மக்களைச் சந்திக்க முடியவில்லை. எனவே சுமார் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எந்த கட்சியில் சேர்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.