மத்திய பாஜக அரசைக் கண்டித்து ‘மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மறுப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் குவித்தல், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளைத் தகர்த்து வருகின்றது.
பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் பலியிட்டு வருகிறது. கருத்து தெரிவிக்கும் உரிமைகளை மறுத்து, ஏதேச்சதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வரலாறு காணாத வேலையின்மை, கட்டறுந்து உயர்ந்து வரும் விலைவாசி, வேலை நீக்கம், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மறுப்பு, விவசாய நிலங்களை பறித்து குழும பண்ணைகள் அமைக்கும் முயற்சி என நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயலில் மோடி ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருவதை இனியும் அனுமதிக்க இயலாது என்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் முறையில்‘மோடி அரசே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்வைத்து 12.09.2023 முதல் தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. 12, 13, 14 தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மையங்களில் போராட்டம் நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.