
முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (வயது 84) நேற்று (4-10-20) இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
ராஜாமணி தங்கபாண்டியன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், ''முன்னாள் அமைச்சர் திரு.தங்கபாண்டியன் அவர்களின் துணைவியாரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான திருமதி.ராஜாமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
திருமதி.ராஜாமணி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.'' என குறிப்பிட்டுள்ளார்.