இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில்,மே 23ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.மே 19ஆம் தேதி அனைத்து கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக அணிக்கு 35 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜக அணிக்கு 300க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.மேலும் மீண்டும் ஆட்சியை பாஜக தக்க வைத்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்று டெல்லியில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக அமைச்சர்கள் இடம் பெற வேண்டும் என்று மோடி விரும்புவதாக பியூஸ் கோயல் பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அமைச்சர் பதவி பெற்று விடலாம் என்ற கனவில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.