Skip to main content

“காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி; கவலை வேண்டாம்” - கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Annamalai response to Kanimozhi on the matter of Tamil Thai greetings

 

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ்ச் சங்கம் புலம்பெயர்ந்த கர்நாடகத் தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ்ச் சங்கமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சாரக் கூட்டம் பாஜக கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது. 

 

கூட்டத்திற்கு பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடிக்கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். மேலும், மேடையிலிருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்‌. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதைக் கண்டு அதிர்ச்சியான ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு தமிழ்த்தாய் பாடலை நிறுத்தினார். அத்துடன் பெண்கள் யாராவது வந்து கன்னட வாழ்த்துப் பாடலைப் பாடும்படி அவர் வலியுறுத்திய நிலையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாகக் கன்னட வாழ்த்துப் பாடலை ஒலிக்கச் செய்தனர்.

 

தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள், குறிப்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி தமிழர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என்று தனது ட்விட்டரில் சாடியிருந்தார். 

 

இந்த நிலையில், “ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகே வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? 

 

‘கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்’ என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்” என கனிமொழியின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்