மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவின் இந்தி மொழி குறித்த பரிந்துரைகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மாங்களை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை கொண்டுவரும் மறைமுக திட்டம்தான் இருக்கிறது. இந்தி மொழித் திணிப்பை பட்டவர்த்தனமாக ஒன்றிய பாஜக அரசு செய்கிறது. இந்தி மொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு மற்ற மாநில மொழிகளைக் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை குறைப்பதாக மட்டும் இல்லை. அழிப்பதாகவும் உள்ளது.
இந்தியை ஆட்சி மொழியாக மட்டுமின்றி அதிகாரம் செலுத்தும் மொழியாகவும் மாற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது. குடியரசு தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கும் எதிரான பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக்கூடாது என ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் பிற மொழிகளை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது. பேரவையில் இருமொழிக் கொள்கையை வலியுறுத்திட பேரறிஞர் அண்ணாவின் அதே உணர்வுடன் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன்” எனக் கூறினார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பல்வேறு கட்சியினர் வரவேற்று உள்ளனர்.