தமிழக அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கிறார். அவருக்கு அமைச்சர் மெய்யநாதன் வகித்துவரும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதனுக்கு அவரிடம் மீதம் இருக்கும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படுகிறது எனக் கடந்த 8 ஆம் தேதி நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தமிழக முதல்வர் கொடுத்த பரிந்துரையை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கான உறுதிமொழியும் ரகசியக்காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்ட பின் அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சரானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.