வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ராகுல்காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
இன்று சென்னை வரும் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். அப்போது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்றும், இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.