Skip to main content

“100 வருடங்களுக்கான கட்சியாக தவெக உருவெடுக்கும்” - ஆதவ் அர்ஜுனா

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

Adhav Arjuna says The TVK  will emerge as a party for 100 years

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று (26-04-25) கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வில் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் என்றைக்கெல்லாம் ஜனநாயகம் மறுக்கப்படுகிறதோ, மக்கள் அந்த ஜனநாயக சக்திகளை தூக்கி எறிந்தார்கள். இன்று ஜனநாயகம் எங்கு இருக்கிறது? என்று பாசிசமும் பாயாசமும் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. ஜனநாயகம்  எப்போது மலரும்? என்கிற நேரத்தில் மக்கள் ஆட்சியை உருவாக்க ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான். அந்த ஜனநாயகன் நமது வெற்றித் தலைவர் விஜய். அவர் வழியில் 2026 இல் மக்களாட்சி ஏற்படுத்தக்கூடிய நாளாக அமையும். கொங்கு மண்டலம் தேசியக் கட்சிக்கு சொந்தமானது, ஆளுங்கட்சிக்கு சொந்தமானது, எதிர்க்கட்சிக்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு புயல் கோயம்புத்தூரில் இன்று இறங்கியிருக்கிறது. 

பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் 100 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அதன் பிறகு, ஆர்.எஸ்.எஸ் மூலம் உருவாக்கப்பட்டு, எமர்ஜென்ஸியின் போது கட்சியின் வேர்கள் ஊடுறுவி இன்று இந்தியாவை ஆளக்கூடிய 100 வருடங்களுக்கும் சிந்தனை கொண்ட பா.ஜ.க இருக்கிறது. தமிழகத்தில் நீதிக் கட்சி மூலம் உருவாகி இன்றைக்கு 100 வருடங்களை கடந்திருக்கிற திமுக இருக்கிறது. அதன் பிறகு, தவெக 100 வருடங்களுக்கான கட்சியாக உருவெடுக்கக் கூடிய முதல் நாள் இன்று. அதை கோவை மண்ணில் இருந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தவெகவில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருக்கின்றனர். 

தவெகவில் கட்டமைப்பு இருக்கிறதா? என்று எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். ஆம், எல்லோரும் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். 1967 மற்றும் 1977 ஆண்டுகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களால் தான் ஆட்சி மாற்றமும், மக்களுடைய எழுச்சியும் உருவாகியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இளைஞர்கள் தான் உருவாக்கினார்கள். அப்படி ஒரு புரட்சியை தவெக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாம் அமைதியாக நமது குறிக்கோளை நோக்கிச் செல்வோம். கடந்த 30 வருடங்களில் இளைஞர்கள் இந்தளவு ஆர்வமாக இருந்தது இல்லை. மற்ற கட்சிகளில், 40 வருடமாக ஒரே மாவட்டச் செயலாளர் தான் இருக்கிறார். அதே போல், 60 வயதில் இளைஞர் அணித் தலைவராக ஒருவர் இருப்பார். அவர்கள் செய்த சாதனை, 30 வருடமாக ஊழல் செய்து மெடிக்கல் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். அதனால் தான் அமலாக்கத்துறை வந்திருக்கிறது. நீங்கள் ரெய்டை பார்த்து பயந்து கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் மக்கள் ஆதரவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று அதிருப்தியில் இருக்கும் போது தவெக தான் மாற்றத்தை உருவாக்கும் என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்