ஸ்ரீரங்கம் தொகுதியில் 1971இல் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதி வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றிபெற்ற இடத்தை, 1977 முதல் 1984 வரை அதிமுக தக்க வைத்தது. அதன் பின் 1991லும், 2001 முதல் 2016 வரையிலும் அதிமுகவே இந்தத் தொகுதியைத் தக்கவைத்தது. தொடர்ந்து 25 ஆண்டுகள் அதிமுக வசம் இருந்த ஸ்ரீரங்கம் தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வசம் வந்துள்ளது.
2001இல் அதிமுக சார்பில் கே.கே.பாலசுப்பிரமணியன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 72,993 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 2006இல் பரஞ்ஜோதி போட்டியிட்டு 89,135 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 2011இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆனந்த் நேரடியாக களமிறக்கப்பட்டார். ஜெயலலிதா 1,05,328 வாக்குகள் பெற்று அதில் 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன் பின் நடந்த இடைத்தோ்தலில் வளர்மதி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து மீண்டும் திமுக சார்பில் ஆனந்த் நிறுத்தப்பட்டார். வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று, 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வளர்மதி வெற்றி பெற்றார். 2016இல் மீண்டும் வளர்மதி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பழனியாண்டி நிறுத்தப்பட்டார். வளர்மதி 1,08,400 மொத்த வாக்குகள் பெற்று, அதில் 14,409 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக வெற்றியைத் தக்கவைத்தார் வளர்மதி.
மீண்டும் 2021இல் நடைபெற்ற இந்தத் தோ்தலில் அதிமுக சார்பில் கு.ப.கிருஷ்ணன் நிறுத்தப்பட்டார். அவர் 93,776 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மீண்டும் பழனியாண்டி நிறுத்தப்பட்டார். அவர் 1,13,539 வாக்குகள் பெற்று, 19,763 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பழனியாண்டி வெற்றிபெற்றுள்ளார். அதிமுக கோட்டையாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் கோட்டையாக மாற்றியிருக்கிறார் பழனியாண்டி.