Skip to main content

''ஆனால் அது நிறைவேறாமலே போய்விட்டது''-திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

dmk

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 

திமுக தலைவர் ஸ்டாலின் அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 34,392 வாக்குகள் பெற்ற நிலையில், ஸ்டாலின் 1,04,622 வாக்குகள் பெற்று, 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி சான்றிதழை பெற்ற ஸ்டாலின் அதனை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

 

dmk

 

''நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி இருக்கக்கூடிய இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துத் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் திமுகவின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை சரி செய்ய திமுக தலைமையில் அமைந்திருக்கக் கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்கின்ற உணர்வோடு ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு மிகப்பெரிய ஆதரவை, மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியை தந்து இருக்கிறார்களோ எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் அந்த பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும்.

 

எங்களை எல்லாம் ஆளாக்கிய கலைஞர் ஐந்து முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராக இருந்தார். கலைஞர் இருக்கும்பொழுதே ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அது  நிறைவேறாமல் போய்விட்டது என்பது எங்களுக்கு ஒரு ஏக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் அந்த ஏக்கம் இன்றைக்கு ஓரளவிற்கு நிறைவேறி இருக்கிறது என்று உணர்கிறேன். 'மக்கள் குரலே மகேசன் குரல்' என்று அண்ணா சொல்வார்கள். ஆகவே மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஏதோ எங்களுக்கு ஆதரவு அளித்தவர்கள், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து நன்றி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்