
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டினை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக தற்போது நான்கு குழுக்களாகச் சிதறிவிட்டது.
ஜெயலலிதாவை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட இவர்கள் ஜெயலலிதாவிற்குச் செய்கிற துரோகம். அதிமுக சிதறுவது அதிமுகவிற்கு மட்டுமல்ல. தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். பாஜக அதைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடி சென்று தன் தாயைச் சந்திப்பதையும் தேர்தல் அரசியலாக ஆக்குகிறார். அம்மாவைப் பார்ப்பது என்பது தேர்தலுக்கு முன்பு பார்த்திருக்கலாம். அல்லது தேர்தலுக்குப் பின்பு பார்த்திருக்கலாம். வாக்குப்பதிவின் போது பார்ப்பது அல்லது தேர்தல் முடிவின் போது பார்ப்பது என எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார் மோடி. அம்மாவையும் அரசியலாக்குகிறார்” என்றார்.