இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்த, தமிழ் மக்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அதன்பிறகு வருடந்தோறும் அங்கு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நேற்று (08/01/2021) இரவோடு இரவாக இடிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூண் இரவோடு இரவாக சிங்கள அரசால் தகர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவுத்தூண் அமைப்பதைக் கூட அனுமதிக்காத ஆட்சியில், ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும்? என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈழத்தமிழர் விவகாரத்தைக் கைகழுவி விடாமல், அவர்களுக்கு வாழ்வுரிமையை வென்றெடுத்துக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.