இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
அப்பொழுது சில சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டனர்.அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும், தவாக கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், காங்கிரசைச் சேர்ந்த செல்லப்பெருந்தகை மற்றும் பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்ட அவர்கள் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்ததாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு எனக் குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.