தமிழக பாஜகவின் முன்னாள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலப் பிரிவின் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்தார். தற்போது காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இது தமிழக பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி ரகுராம் தற்போது தெரிவித்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டை நாம் கடந்த நக்கீரன் இதழிலேயே வெளியிட்டிருந்தோம்.
அதில் “அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவாதத்துக்குள்ளான நிலையில், தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்காக இதுவரை பா.ஜ.க. என்ன செலவு செய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் அண்ணாமலைக்காக பா.ஜ.க. செலவு செய்துள்ளது. அவருக்காக ‘வார் ரூம்’ எனப்படும் கணினித் தொடர்பு மையங்கள் மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார் ரூம் உருவாக்க மூன்று கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு வார் ரூமிலும் 80 கணிப்பொறி பட்டதாரிகள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், போலி நிதி நிறுவனமான சுரானாவுக்குச் சொந்தமான இடம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் வார் ரூம் எனப்படும் கணிப்பொறி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நான்காவது வார் ரூம் ஒன்றை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த வார் ரூம் மூலம்தான் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டுகிறார்” என நாம் தெரிவித்திருந்தோம்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை தலைமையிலான வார் ரூமில் இருந்து மிகவும் மோசமான கேவலமான தனிப்பட்ட தாக்குதல்களை நாங்கள் சந்திக்கிறோம். பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். தமிழக காவல்துறை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.