
நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக சீமான் பேச்சும் செயலும் தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது. எதைச் சொல்லுவது?. மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள் பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவை பேரறிஞர் என்று சொல்வதையா?. தமிழிசை, சீமான் எங்கள் தீம் பாட்னர் என்று கூறியதை நீங்கள் மறுக்காத்தையா?.
திருமாவளனை அண்ணன் என்று கூறிக்கொண்டே நாம் தமிழர் கட்சி மேடையில் மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும் போதும், கேலி பேசும் போதும், தாங்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்வதையா?. நடிகர் விஜய் கட்சி தொடங்குகிற போது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துவிடுவாய் என்று பேசியதையா?. அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது சங்கி ‘என்றால் செருப்பால அடிப்பேன்’ என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பிறகு, ‘சங்கி’ என்றால் சகத் தோழன் என்று சொல்வதையா?. இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது.
மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத் தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் தங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், ‘பிசுறு’ என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மானை ‘மசுரு’ என்று பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இன்னும் எத்தனையோ இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது.
அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள். தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது. தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும், பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசத்தை விதைத்து கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்.

எனது இத்தனை ஆண்டுகால தமிழ்த்தேசிய அனுபவமும் கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.