Skip to main content

வீடுகளுக்குள் வெள்ளம் - தவிக்கும் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் -மு.க.ஸ்டாலின் (படங்கள்)

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
ddd

 

ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பது மட்டுமே 'நிவர்' சாதனை என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படாமல், சென்னை மாநகரில் - புறநகரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து - மின்சாரத் துண்டிப்பால் அவதிக்குள்ளாகி குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கு எடுக்கிறோம்' என்று காலம் கடத்தாமல் - உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம் - வீடுகள் இழப்பு - உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும் - உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மூன்றாவது நாளாக சென்னை மாநகரத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், இந்தக் குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது. 

 

ddd

 

தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகள் - ஏன், எனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.  


“முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது” என்று கூறும் முதலமைச்சரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்துக் கொண்டிருப்பது மட்டுமே, “நிவர் சாதனை” என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.


இதுவரை சென்னை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சக்கணக்கானோர் மழை வெள்ளத்திற்கும் - புயலுக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. ஏன், ஆங்கிலப் பத்திரிகையிலேயே மழை வெள்ளம் எப்படி சென்னை புறநகர வாசிகளின் இரவு தூக்கத்தைக் கெடுத்து, அவர்களை இருட்டிலும் இன்னலிலும் தள்ளியது என்பதை வெளியிட்டும் கூட, அரசின் சார்பில் “விளம்பரத்திற்காக” பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. 

 

ddd


“முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் குறைவுதான்” என்று கூறும் முதலமைச்சரால், அந்த ‘குறைந்த சேதம்’ என்ன என்பதைக் கூட உடனடியாகத் தெரிவிக்க முடியாமல்,  “இனிமேல்தான் கணக்கு எடுக்க வேண்டும்” என்கிறார். 

 

‘கஜா’ புயலில் எப்படி கணக்கு எடுக்கப்பட்டது என்பதை இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து விடவில்லை. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசமடைந்து விட்டது என்றாலும் - பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்கிறார். 

 

அதையாவது முழுமையாக - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் - வாழை விவசாயிகளுக்கும் அ.தி.மு.க அரசு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா அல்லது வழக்கம் போல் அதிலும் முறைகேடுகளுக்கு வித்திடுவார்களா என்பதுதான் விவசாயிகளின் மனதில் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி ஏற்கனவே பட்ட பழைய அனுபவத்தால் எழுந்தது என்பதை மறுக்க முடியாது. 

 

ddd


எனவே, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து - மின்சாரத் துண்டிப்பால் அவதிக்குள்ளாகி - தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் – குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு முதலில் சென்னை மாநகரில் - புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

 

“கணக்கு எடுக்கிறோம்” என்று காலம் கடத்தாமல் - உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம் - வீடுகள் இழப்பு - உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும் - உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

 

படங்கள்: ஸ்டாலின், அஷோகுமார் & குமரேஷ்

 


 

சார்ந்த செய்திகள்