கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் கைக்கட்டி நிற்பதா என மத்திய அரசின் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இவை சாதாரண விவசாயிகளை கார்பெட்களின் நவீன வலையில் சிக்க வைக்கிறது. விவாசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு நமது விவசாயிகள் கைகட்டி நிற்கும் நிலையை இம்மசோதாக்கள் ஏற்பட்டித்தியிருக்கிறது.
இதுகுறித்து மாநில அரசுகளிடமும், விவசாய பிரதிநிதிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு அவசரப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இம்மசோதாக்களை அதிமுக ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
விவசாயிகள் சுட்டி காட்டும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இம்மசோதாக்களை மாநிலங்கள் அவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் பெரும் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எச்சரிக்கின்றோம்” இவ்வாறு கூறியுள்ளார்.