தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள கச்சேரி சாலையில் இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தற்போது வாக்களித்துள்ளார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த அவருடன் அவரது மனைவி மற்றும் மகனும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், “இந்தத் தேர்தலில் எங்களது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு வெள்ளோட்டமாக இருக்கும். எதிர்க்கட்சிகளால் வெற்றிபெற முடியாது என்பது நன்றாக அவர்களுக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் எங்கள் மீது பொய்யான பிரச்சாரத்தை அள்ளி வீசுகிறார்கள்” என்றார்.