அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள்வன் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
இந்நிலையில் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய முன்னேற்றித்திற்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) எனபதன் சுருக்கமே (INDIA) இந்தியாவாகும். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.