நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்.#Emergency2019 #IndiaAgainstCAA
— Udhay (@Udhaystalin) December 19, 2019
இந்த நிலையில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை மசோதாவின் எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று கூறியுள்ளார். இந்த கருத்து ரஜினியை சீண்டும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து கூறிவருகின்றனர்.