ஈரோடு மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் வந்த மாதேஸ்வரன் என்பவர் எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் வெளியே வந்த அவர், "சார் நான் லாரி டிரைவர். எனது வீடு ஆர்.என்.புதூர் சி.எம்.நகரில் உள்ளது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். எங்கள் வீடு அருகே A.P.பெரியசாமி என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். அந்தக் கடைக்குச் சென்ற எனது 12 வயது மகளிடம் அந்த பெரியசாமி அவருடைய லேப்டாப்பில் ஆபாசப் படங்களைக் காட்டி குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனது குழந்தை எங்களிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். உடனே பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பெரியசாமி தமிழருவி மணியனின் காந்திய மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவராக இருப்பதால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஆகவே தான் இன்று எஸ்.பி. ஐயாவிடம் நேரில் வந்து புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.
அப்பழுக்கற்ற அரசியல் நடத்துவோம் எனக் கூறுகிறது காந்திய மக்கள் கட்சி. ஆனால் அவர் கட்சி நிர்வாகி மீது ஆபாச புகார் வந்துள்ளதே என அவர்களிடம் கேட்டால், வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார் கொடுக்க வைத்துள்ளனர் என்கிறார்கள். முழு விசாரணை நடக்கட்டும். பொறுத்திருப்போம்.