‘நீட்’டுக்கு உண்டான சட்டப் போராட்டம் தொடரும் என பிரதமரிடம் சொன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். பிரதமர் உடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, “பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டார். பிரதமரின் தாயார் மறைவிற்கு இரங்கலை தெரிவித்தேன். தமிழகத்தில் விளையாட்டுத்துறை பற்றி கேட்டார்; சொன்னேன். கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்திற்கு வாய்ப்புகள் கொடுங்கள் என கேட்டேன். நீட் விவகாரத்தையும் குறித்து பேசினேன். அதற்கு சில விளக்கங்களை கொடுத்தார். அதற்கு தமிழக மக்களின் மனநிலை இதுதான் அதை கூறுகிறேன் என்றேன். தொடர்ந்து சட்டப் போராட்டம் தொடரும் என சொன்னேன்.
எய்ம்ஸ் கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு. இந்த சந்திப்பில் அதைப் பற்றி பேசவில்லை. நீட் தேர்வை பேசினேன். நீட் தேர்வே அரசியல் சார்ந்த பிரச்சனை தான். கூட்டணி சார்ந்து எதையும் பேசவில்லை. தமிழகத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என அவர் கேட்டார். நான், கேலோ இந்தியா திட்டத்தினை மத்திய அரசு நடத்துகிறது. இத்திட்டத்தினை தமிழகத்தில் நடத்த கோரிக்கை வைத்தேன். மைதானங்கள், உள் விளையாட்டு அரங்குகள் அமைக்க கோரிக்கை வைத்தேன். தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் கட்டப் போகிறோம் எனக் கூறினேன். அதை எப்படி பராமரிப்பீர்கள்; தனியார் வசம் அதை ஒப்படைப்பீர்களா அல்லது அரசு பார்த்துக் கொள்ளுமா என கேட்டார். அவர் முதல்வராக இருந்தபோது நடந்த அனுபவங்களை பகிர்ந்தார்” எனக் கூறினார்.