"ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதிகளாக இருக்கும் எழுவரின் விடுதலை குறித்த பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்ததே தவறு. நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு ஏற்புடையதல்ல” என நீதிமன்றத்திற்கு எதிராக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார் பாஜகவின் ஹெச்.ராஜா.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நாடு முழுவதும் 13 கோடிக்கும் மேலான மக்களைச் சந்தித்தும், குறிப்பாக தமிழகத்தில் 40 லட்சம் மக்களைச் சந்தித்து நிதி திரட்டி வருகின்றது விஸ்வஹிந்து பரிஷித் அமைப்பு. 31-01-2021 தொடங்கி 28-02-2021க்குள் நிதி திரட்டும் காலமாக கணக்கிட்டு, அதனின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் நிதி திரட்டி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹெச்.ராஜா முன்னிலையில் சிவகங்கையில் நிதி சேகரிப்பு தொடங்கப்பட்டு, இன்று காரைக்குடியிலுள்ள ராம நவமி மண்டபத்தில் நிதியினை சேகரித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனையை அனுபவித்து வருபவர்கள். எழுவர் விடுதலையில் நீதிமன்றம், விடுதலை செய் அல்லாது செய்யாதே என்று சொல்ல வேண்டும். அதைவிடுத்து ஆளுநரிடம் தள்ளிவிட்டது தேவையில்லாத செயல். ஆளுநர் எப்படி இதற்குப் பொறுப்பாவார்? இது எனக்கு ஏற்புடையது அல்ல.
திமுக விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறது. காங்கிரஸோ விடுதலை செய்யக்கூடாது என்கின்றது. இதில் எப்படி ஆளுநர் தலையிட முடியும் என்றவர், தொடர்ந்து "இந்து மதத்தை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை, கல்யாணராமனை கைது செய்தது ஏன்? பாஜக கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருந்திருந்தால் வைரமுத்துவை கைது செய்திருக்கும், கல்யாணராமனை கைது செய்திருக்காது. தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் அவர்.