அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருவதால், அ.தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (31-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உண்மை குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிமுக இந்த போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறது. யார் அந்த சார்? அந்த கேள்விக்கு இன்னும் காவல்துறையினரிடம் இருந்து பதில் வரவில்லை. ஒரு காவல் ஆணையர் ஒரு தகவலை சொல்கிறார். மறுநாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அதை மறுத்து பேசுகிறார். இப்படிப்பட்ட சந்தேகங்கள் நிலவுகின்ற காரணத்தினால் தான் உண்மை குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்கு அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. உண்மை குற்றவாளி நாட்டுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்ற அடிப்படையில், எங்களுடைய ஐ.டி விங்கை சேர்ந்த நிர்வாகிகள் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகையை ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆனால், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு போடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
இதில் யார் பேரையும் குறிப்பிடவில்லை. ஆனால், காவல் துறை ஆணையர் இதில் ஒருவர் தான் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து மற்றொரு நபரும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. யார் அந்த சார்? அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை விசாரிக்காமலே, இதில் ஒருவர் தான் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்லுகிற போது சந்தேகம் எழுகிறது. ஏதோ தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக இத்தனை அமைச்சர்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டேன். ஆனால், இந்த ஆட்சியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில்லை. அண்ணா நகர் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்?. மடியில் கனம் இருப்பதால் தான் திமுகவிற்கு பயம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த எப்.ஐ.ஆரில், ஞானசேகரன் செல்போனில் சார் என்று ஒருவரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.