முதல்வர் எடப்பாடி கூட்டிய அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திடீர் என்று தேதி தள்ளிவைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களுக்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சித் தலைமைக்குமே ஷாக் அனுபவங்கள்தான் கிடைத்தது என்கின்றனர். வரவிருக்கும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலோடு விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் ஏப்ரலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அது தொடர்பான ஆலோசனைக்காகத்தான் கடந்த 10-ந் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார். தேர்தல் நேரத்தில் ஒத்துழைக்காத கட்சிப் பிரமுகர்களைப் பற்றி, தங்கள் தலைமையிடம் நேரடியாகப் புகார் கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு, இந்தக் கூட்டத்துக்கு சென்றவர்கள், அங்கு சம்பந்தப்பட்டவங்களைப் பற்றிப் பேச முடியாமல் திகைத்து நின்றார்கள்.
இது பற்றி விசாரித்த போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கடுமையான தோல்வியைச் சந்தித்தது. மாஜி மந்திரியும் எம்.பி.யுமான வைத்திலிங்கம்தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று தலைமையிடம் புகார் சொல்ல சென்ற போது கட்சிப் பிரமுகர்கள், அந்தக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் வரிசையில் வைத்திலிங்கம் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும், ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து போயுள்ளனர். இன்னும் சிலரோ, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட தேர்தலை எல்லாம் இப்போதைக்கு நடத்த வேண்டாம். நடத்தினால் நாம் பள்ளம் படுகுழியில்தான் விழுவோம் என்று எடப்பாடியின் முகத்துக்கு நேராகவே சொல்ல, மிகவும் அப்செட் ஆகியுள்ளார் எடப்பாடி.
மேலும் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமாரைப் பார்த்து சிலர், எதற்கெடுத்தாலும் அறிக்கையும் விளக்கமும் கொடுக்கற நீங்கள், உங்க துறை சம்பந்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் பற்றி ஏன் தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இதற்கு ஜெயக்குமார் பதில் கூறாமல் அமைதியாக இருக்க, எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும், தேவையில்லாததைப் பேசாதீங்க என்று கூறியுள்ளனர். ஆசை காட்டும் தி.மு.க.விடம் பலியாகி விடாதீர்கள் என்று அவர்களை பேசவிடாமல் அமைதியாக்கியுள்ளனர். இதனால், அப்செட்டான கட்சிப் பிரமுகர்கள், மனம் விட்டுப் பேசமுடியாத இந்தக் கூட்டத்தில் கலந்துக்கறதே வேஸ்ட்டுன்னு மற்ற நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, அடுத்த நாள் கூட்டத்தில் பெரும்பாலானோர் வரவில்லை என்று கூறுகின்றனர். கட்சியினரின் எதிர்ப்பைக் கண்டு திகைத்துப் போன எடப்பாடி, ஏப்ரலில் நடத்தவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் ஆலோசனையில் இருப்பதாக சொல்கின்றனர்.