தமிழக முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் இன்று (18/03/2021) தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் அனைத்திற்கும் தற்போதைய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜெயலலிதாவிற்கு இதைவிட வேறு யாரும் துரோகம் செய்துவிட முடியாது. ஜெயலலிதா ஜி.எஸ்.டி., நீட், உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்தார். நாடாளுமன்றத்தில் முத்தலாக், சிஏஏ.வை போன்றவற்றை ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க. தேனி அ.தி.மு.க. எம்.பி. பா.ஜ.க. உறுப்பினர் போல் செயல்படுகிறார்" என்று ரவீந்திரநாத் குமாரை ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
அதேபோல், ஓசூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே பிரதமர் மோடியை எதிர்ப்பது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே. பிரதமர் மோடி சொன்ன புதிய இந்தியாவை நானும் தேடிக் கொண்டே இருக்கிறேன். நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு முட்டைதான்" என்றார்.