தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள நிலையில், பசுமை மண்டலங்களில் மதுக்கடைகளைச் சில விதிகளுக்குட்பட்டு திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தேவையற்றதாகும்.
கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதன் பயனாக மது இல்லாத தமிழகத்திற்கு ஆதரவாக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது. அதை மதித்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும்.
மாறாக, பசுமை மண்டல மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது அங்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிதைத்து விடும்.
இதையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மதுக்கடைகள் விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.