தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களை விட ஆர்வமாக இருக்கிற பா.ஜ.க. தற்போது மேயர் சீட்டுகளை குறி வைத்து தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 3 மாநகராட்சியைக் கேட்டு அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிகாரத்தோடு கணக்குப்போட்டு வருகிறது.
குறிப்பாக கோவை, நாகர்கோவில், நெல்லை ஆகிய மூன்று மாநகராட்சியை கைப்பற்ற திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குள் தமிழக அரசு மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இதனால் அதிமுக கட்சியினர் மீது பாஜ கட்சியினர் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே வேலூர் மக்களவை தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாஜ கட்சியை அதிமுக கண்டு கொள்ளவில்லை. இதனால் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தலில் பாஜக கட்சியை கழட்டிவிட அதிமுக தயாராகி வருகிறது என்று சொல்கின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாதத்தின் போது பாஜக கூட்டணியை விட்டு சென்றால் கவலையில்லை என்று தெரிவித்தார். மேலும் தமிழக பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்கள் எடப்பாடி அரசின் நடவடிக்கையை அமித்ஷாவிற்கு தகவல் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.