அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் ''புதுகை புயல் டாக்டர் விபி பேரவை'' தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைத்து பக்கத்து மாவட்டங்களிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவு இளைஞர்கள் கிளைகள் தொடங்கி வருகின்றனர்.
இந்த பேரவையை வளர்க்க பேரவையின் பெயரில் முகநூல் பக்கமும் உருவாக்கப்பட்டு அமைச்சரின் சுற்றுப்பயணம் தொடங்கி அனைத்து நிகழ்சிகளும் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த சமூக வலைதளத்தில் ஒரு அதிமுக தொண்டரான வழக்கறிஞர் ராசாளி சீ. ஜெயப்பிரகாஷ், ''ஜெ. மரணம் ஒரு மர்மம்'' என்ற ரீதியில் ஆட்சியாளர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், "அதிமுக தீர்மானம்... தொண்டனின் கேள்வி... அம்மா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் என்ன ஆனது? மூடிமறைக்க முயற்ச்சியா? இன்னும் ஒருவருடம்தான் அதிகாரம்.
அம்மா மரணத்திற்கு பதில் இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் புரியும். பதவியிலும், பொறுப்பிலும் இருப்பவர்கள் சில ஆயிரம்பேர். அவர்களுக்கு வேண்டுமானால் நான் கேட்பதில் கோவம் இருக்கும். ஏனென்றால் உண்மையை கேட்டால் பொறுப்பு பதவிபோகும். சம்பாதிக்க முடியாது. ஆனால் பதவி, பொறுப்பு இல்லாமல் கட்சிக்காக உழைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களின் உணர்வை, கோபத்தை உங்களால் கட்டுபடுத்த இயலாது. தொண்டர்களின் அமைதிக்கு காரணம் என்ன? தொண்டர்களின் மனநிலை என்ன?
என்பது சட்டமன்ற தேர்தலில் தெரியும். அம்மா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லையெனில் சட்டமன்ற தேர்தலில் உங்களை புறமுதுகிட்டு ஓடச்செய்வோம்களே, நூற்றுக்கு நூறுமுறை அம்மா ஆட்சி ஆட்சின்னு சொல்ரோமே, அம்மாவின் மரணத்திற்கு நீதிவேண்டும்''. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர். யாரிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார் என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது. ஆனாலும் ஒட்டு மொத்த மக்களின் நியாயமான கேள்வி தான் என்ற ஆதரவு குரலும் கேட்கிறது.