Skip to main content

''120 பி கான்ஸ்பிரஸியில் எடப்பாடியை கொண்டுவர வேண்டும்''-காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பேச்சு 

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

"Edappadi Palaniswami should be brought in 120B Conspiracy"-Congress Selvaperunthakai speech

 

 

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜெ.மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கை எனப் பரபரப்பைக் கண்டுள்ளது தமிழக சட்டப்பேரவை. மறுபுறம் எதிர்க்கட்சி துணைத் தலைவரை நியமிப்பதில் தங்கள் கொடுத்த கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மட்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்குகொண்டனர். இந்நிலையில் இன்று பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை, ''1984 ஆம் ஆண்டு நூறு நாள் என்ற ஒரு திரைப்படம் வந்துச்சு. அந்த படத்தை முன்னாள் முதல்வர், துணை முதல்வர் ஓபிஎஸ் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் மர்மமான கொலைகள் நடக்கும். அதில் நடிகர் விஜயகாந்த், சத்யராஜ், நளினி எல்லாம் நடிச்சிருப்பாங்க. எந்த நேரத்தில் எப்படி கொலையை டிசைன் பண்ணுவார்கள் என்றே தெரியாது. அதுமாதிரிதான் துப்பாக்கிச்சூட்டில் நடந்துள்ளது.

 

இது திட்டமிட்ட படுகொலை. அந்த சுடலைமுத்துவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது நவீனமான எஸ்.எல்.ஆர் துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு. இதையெல்லாம் நாம் ஆய்வு செய்யவேண்டும். இன்னும் ஒருபடி மேலே சொல்கிறேன் துரோகம்... துரோகம்... துரோகம்... என துரோகத்தை தவிர எதுவும் தெரியாதவர்கள்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்மா... அம்மா... என்று சொல்லிக்கொண்டிருந்தீர்களே அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டீர்களே. கோடநாட்டில் எவ்வளவு பெரிய படுகொலை நடந்தது அதிமுக ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுத்தீங்க?.  திமுக ஆட்சியில் முதல்வர்தானே நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்.  

 

சட்டப்பேரவை தலைவர் மூலம் தமிழக முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை  இதில் ஒரு சரியான தீர்வுகாண வேண்டும்.எந்த குற்றவாளிகளும் தப்பிக்கக் கூடாது.120 பி கான்ஸ்பிரஸியில் எடப்பாடி பழனிசாமியைக் கொண்டுவர வேண்டும் எனக் காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்