Skip to main content

கரோனா தொற்றால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் திவாகரன்... நலம் விசாரிக்காத சசிகலா..!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Divakaran at Ramachandra Hospital in Chennai with corona infection; Sasikala does not inquire about health ..!

 

கரோனா பெருந்தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு அவசர அவசரமாக சென்னை போளூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

 

கரோனா பெருந்தொற்று குறித்து அதிமுகவினருக்கு ஃபோன் மூலம் நலம் விசாரித்து அந்த ஆடியோவை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை உண்டாக்கிவரும்  சசிகலா, கூடப் பிறந்த சகோதரர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிற நிலையிலும்கூட நலம் விசாரிக்காமல் இருப்பது திவாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் மனக்குமுறலை உண்டாக்கியிருக்கிறது.

 

மற்ற அரசியல்வாதிகளைப் போல சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பதைத் தவிர்க்கும் திவாகரன், சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சுந்தரகோட்டை பண்ணை வீட்டில்தான் வசித்துவருகிறார். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவும்போது அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளுக்குச் சென்றுவந்த திவாகரன், கரோனா இரண்டாவது அலை மிகவீரியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியதும் வெளியில் செல்வதையும், நெருக்கமானவர்களை சந்திப்பதைக் கூட தவிர்த்ததோடு, வீட்டின் மெயின் கேட்டைப் பூட்டி அதில் யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம் என போர்டு வைத்து பாதுகாப்பாக இருந்தார். ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு திவாகரனுக்கு உடல்நிலை மோசமாக, சிகிச்சை பெற்றுவந்த திவாகரனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட, தஞ்சாவூர் மருத்துவர்களின் ஆலோசனைபடி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட, அவரை ஆய்வுசெய்த மருத்துவர்கள் கரோனா தொற்று  இருப்பதை உறுதிசெய்து தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

 

Divakaran at Ramachandra Hospital in Chennai with corona infection; Sasikala does not inquire about health ..!

 

"திவாகரனுக்கு உதவியாக அவரது மகன் ஜெயானந்தும், அவரது மருமகன் விக்ரமன் மட்டுமே உடனிருந்து கவனித்துவருகின்றனர். திவாகரனின் உறவினர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்தும்கூட அவர்களுள் ஒருவர்கூட திவாகரன் உடல்நிலைகுறித்து விசாரிக்கவோ, ஆறுதலுக்காக நேரில் வரவோ இல்லை. அதே நேரம் சசிகலா குடும்பத்தில் யாருக்கேனும் எதாவது நடந்தால் முதல் ஆளாக நிற்பவர் திவாகரன், அவரை பதவி வெறிக்காக திட்டமிட்டே சிலந்தி வலைகளைப்போல பின்னி புறக்கணித்துவருகின்றனர். இதற்கு காலமே சரியான பாடம் கொடுக்கும்" என்று கலங்குகிறார் திவாகரனுக்கு மிகமிக நெருக்கமான பிரமுகர் ஒருவர்.

 

இதுகுறித்து திவாகரன் ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்தோம், "ஒருகாலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்தமானவர் திவாகரன். அதேபோல சசிகலா, திவாகரனை சகோதரன் என்கிற பாசத்தைத் தாண்டி பெற்ற பிள்ளையைப் போல பாசம் வைத்திருந்தார். மனதில் பட்டதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று பேசிவிடுவது அவரது வழக்கம். அதுபோலதான் தஞ்சை திருமண விழாவில் திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதேபோல தினகரனின் சுயநலம்தான் அதிமுக பிளவுக்கு காரனம் என தடாலடியாக பேசினார். அதே போல திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் பேசினார். சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு முதல்நாள் கரோனா தொற்று இருப்பதாக கூறி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், எதைப் பற்றியும் யோசிக்காமல் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு சென்று சசிகலா குறித்து நலம் விசாரித்துவிட்டு, ஏதோ சதி நடக்கிறது என்றும் சிறைத் துறையினர் சார்பில் எந்த வசதியும் செய்துகொடுக்காமல் சாதாரண மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவருக்கு எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை, என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் சண்டையிட்டுவிட்டு மன்னார்குடி வந்ததும், ‘என்னமோ சதித்திட்டம் நடக்கிறது. சசிகலாவிற்கு ஆபத்து ஏற்பட போகிறது’ என மீடியா முன்பு பேசி பரபரப்பை உண்டாக்கி ஒட்டுமொத்த பார்வையையும் சசிகலாவின் பக்கம் திருப்பினார். அதேபோல சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் முதல் ஆளாக சசிகலா சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்திருக்கிறார். இது அவரது உடல்நலனுக்கு நல்லது என அக்கறையோடு பேட்டியளித்தார். இப்படி சசிகலாவின் சுக துக்கங்களில் இருந்த திவாகரனை பதவி வெறிக்காக சிலர் சசிகலாவிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதோடு திட்டமிட்டே திவாகர்மீதும் அவரது மகன்மீதும் சசிகலாவை வெறுப்படைய செய்துவிட்டனர். திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணத்திற்கு கூட வாழ்த்து சொல்லவிடாமல் தடுத்துவிட்டனர்." என்றனர்.

 

மேலும், "சசிகலா சிறையில் இருந்து வந்தபோது பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு சிறப்பாக அமைய திவாகரனின் மகன் ஜெயானந்தும் அவரது மருமகன் டாக்டர் விக்ரமனும் பெரும்பாடுபட்டனர். அவர்கள் சசிகலா சென்னைக்கு வரும்போது கான்வாயில் வந்த ஜெயானந்தின் கார் ஆக்சிடண்ட் ஆனது. அதுகுறித்து கூட சசிகலாவின் காதிற்கு செல்லவிடாமல் கச்சிதமாக பார்த்துக்கொண்டனர். திவாகரன் சசிகலாவோடு நெருங்கிவிட்டால் புஸ்வானமாக போய்விடுவோம் என்பதாலேயே அவருக்கு எதிராக காய்நகர்த்திவருகின்றனர். கூடபிறந்த தம்பி என்கிற முறையில் விசாரிக்கவில்லை என்றாலும் தொண்டர்களிடம் பேசி ஆடியோவை வெளியிட்டு பரபரப்பாக்குவது போலவாவது தொண்டனாக நினைத்து நலம் விசரிக்கலாமே" என ஆதங்கப்படுகிறார்கள்.

 

இதற்கிடையில் திவாகரன் பூரண குனமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோயில்களில் பூஜை செய்துவருகின்றனர். ஆதரவற்றோர் பள்ளி சிறுமிகளும் மனமுறுகி வேண்டுதல் நடத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்