Skip to main content

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்... ஈ.ஆர். ஈஸ்வரன் 

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
bus

 

 

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் ஒரு மாவட்டத்திற்குள் ஒரு பேருந்தில் பயணித்து விட்டு மாவட்ட எல்லையில் இறங்கி அடுத்த மாவட்ட பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த சிரமம் பயணிக்கின்ற அடித்தட்டு மக்களுக்குதான் தெரியும். மாவட்டங்களுக்குள்ளே பயணித்தால் கரோனா பரவாது என்ற நிலைபாடும், அதே பேருந்து பக்கத்து மாவட்டத்திற்குள் நுழைந்தால் கரோனா பரவும் என்ற நிலைப்பாடும் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

உதாரணத்திற்கு கரூரிலிருந்து ஈரோடு வர வேண்டுமென்றால் மூன்று பேருந்துகள் மாறி வர வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து மாவட்டத்திற்குள் பயணிக்காமல் விவசாய வேலைக்கு செல்ல முடியாது. தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாது. ஆயிரக்கணக்கான கட்டிட வேலை தொழிலாளர்கள் செல்ல முடியாது. வாழ்வாதாரத்திற்காக எல்லோரும் மாவட்ட எல்லைகளில் சிரமப்பட்டு பேருந்து மாறி பயணிக்கிறார்கள். அரசு இந்த சிரமத்தை புரிந்து கொண்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.

 

வருமானத்திற்கு வழி இல்லாமல் குடும்பத்தில் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற மக்களை மின்சார வாரியத்திற்கு கூடுதல் வைப்புத்தொகை கட்ட வேண்டுமென்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம். தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு இப்போதுதான் ஆட்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தயாரிக்கின்ற பொருட்கள் எப்போது விற்கும் என்று தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்சார வாரியத்திற்கு வைப்புத்தொகையை அதிகமாக கட்ட வேண்டுமென்று வற்புறுத்துவதும் நியாயமில்லை. கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து எல்லோரும் மீள்கின்ற வரை மின்சார வாரியம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்க கூடாது.

 

போக்குவரத்து துறை மிகவும் மந்தமான சூழலில் இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. எந்த வியாபாரமும் சரிவர நடக்கவில்லை. மக்கள் போக்குவரத்துக்கே அரசு இப்போதுதான் அனுமதித்திருக்கிறது. இப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை அதிகரித்து வாங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

 

வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணைகளை கட்ட கால அவகாசம் கொடுத்த அரசு இன்றைக்கு வட்டிக்கு வட்டி போட்டு தவணையை கட்ட கட்டாயப்படுத்துகிறது. மாத தவணை கட்டுவதற்கு இன்னும் ஆறு மாத காலம் கால அவகாசம் வேண்டும். கரோனா பாதித்த காலத்திற்கு வட்டி தள்ளுபடியும் அறிவிக்க வேண்டும்.

 

மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற வகையில் பரிசீலித்து நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்