



கோவையில் திமுக பிரமுகர் பையா என்கிற கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை திமுக மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா என்கிற கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான வீடு காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் உள்ளது. கிருஷ்ணன் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். காளப்பட்டி பேரூராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்வதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வந்தனர். கிருஷ்ணன் துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்றிருந்தார். இதனால் அதிகாரிகள் அவரது வீட்டில் காத்திருந்தனர். ஒன்றரை மணியளவில் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த 30க்கும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து இரண்டே முக்கால் மணி நேர காத்திருப்பிற்கு பிறகு 2 மணியளவில் வருவான வரித்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று சோதனையை துவக்கினர். தொடர்ந்து வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது கண்டித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தற்போது திமுக நிர்வாகி ஒருவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.