அதிமுகவில் வழிகாட்டும் குழு அமைப்பதில் மும்முரமாக இருந்தபோது 'என்ன நடந்தது?’ என்பதை விவரித்தது ஓ.பி.எஸ். தரப்பு - “தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் யாரும் வழிகாட்டும் குழுவில் இடம்பெற வேண்டாம் என்று யோசனை தெரிவித்த ஓ.பி.எஸ்., கட்சியில் உள்ள பழைய சீனியர்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள 11 முக்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், வழிகாட்டும் குழுவில் முன்னுரிமை தரவேண்டும். தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதுதான் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்று வலியுறுத்தினார் ஓ.பி.எஸ்.
எடப்பாடி தரப்பிலிருந்து பேச வந்த ‘மணிகள்’ வைத்திருந்த பட்டியலில், 11 பேரில் 8 பேர் கவுண்டர்களாக இருந்துள்ளனர். தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் போன்ற பெயர்களைப் பட்டியலிட்டுள்ளனர். கவுண்டர்களில் என்னென்ன உட்பிரிவுகள் இருக்கின்றனவோ, அத்தனை பிரிவில் உள்ளவர்களையும், வழிகாட்டும் குழுவில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கினார்கள். அந்த பட்டியலை பார்த்ததும் ஓ.பி.எஸ். டென்ஷனாகி, “இது என்ன அதிமுகவா? இல்லை.. ஜாதி கட்சியா?” என்று எகிறியிருக்கிறார்.
பிறகு, எங்கள் தரப்பிலிருந்து ஐந்தாறு பேரை போட்டுக்கொள்கிறோம், என்று சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு எடப்பாடி தரப்பு, முக்குலத்தோர் என்றால் திண்டுக்கல் சீனிவாசனைப் போட்டுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. உடனே, ஓ.பி.எஸ். “அப்படியென்றால் மற்ற சமுதாயங்களில் யார் யாரைப் போடலாம்னு நான் ஒரு லிஸ்ட் தர்றேன்’ என்று கூறிவிட்டு, “திண்டுக்கல் சீனிவாசன் சீனியர். முக்குலத்தோர் பிரிவில் அவர் இருப்பது சரிதான். அடுத்து ஜே.சி.டி.பிரபாகர், பா.மோகன், மனோஜ் பாண்டியன், சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், கோபாலகிருஷ்ணன் என, தர்மயுத்தம் நடத்தியபோது தன்னுடன் இருந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். தஞ்சாவூர் பெல்ட் என்றாலும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஓ.பி.எஸ். மீது அன்பு வைத்திருப்பவர்தான். எப்படி பார்த்தாலும், வழிகாட்டும் குழுவில் இருக்கும் ஆறேழு பேர், ஓ.பி.எஸ்.ஸிடமும் நட்பு பாராட்டி வருபவர்களே!
ஓ.பி.எஸ்.ஸை வம்பில் இழுத்துவிடுவது போன்ற இன்னொரு விஷயத்தையும் எடப்பாடி தரப்பில் கூறியிருக்கின்றனர். அதாவது, ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர் ஆக சம்மதிக்க வேண்டும் என்று ‘நூல்’ விட்டனர். அவரோ, கறாராக ‘நோ’ சொல்லிவிட்டார். அப்படி பொதுச் செயலாளரானால், சசிகலா தரப்புக்கும் தனக்கும் பின்னாளில் வழக்கு, மோதலெல்லாம் வரும் என்பதை அறியாதவரா ஓ.பி.எஸ்.?” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் சாதுர்யம் குறித்து சிலாகித்தனர்.