Skip to main content

கூட்டணிக்கு பிறகு அதிமுகவின் முதல் செயற்குழு (படங்கள்) 

Published on 02/05/2025 | Edited on 02/05/2025

 

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததை தொடர்ந்து அதற்கடுத்த நகர்வாக தமிழகம் வந்திருந்த அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்திருந்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட தீவிர பணிகளில் அதிமுக இறங்கியுள்ளது. கடந்த 25/04/2025 அன்று அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதேபோல் மே இரண்டாம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (02/05/2025) தற்பொழுது அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காரில் வந்த எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்றனர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களின் மொபைல் போன்கள் அனைத்தும் வெளியே வாங்கி வைக்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்த பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் இதில் சில முக்கிய முடிவுகளை அதிமுக எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேறு எந்தெந்த கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்