தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக ஆளுநரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு துரைமுருகன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் ஆளுநரை சந்திப்பதாக வெளியான தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் அமைச்சரவை மாற்றம் மற்றும் ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''நேத்து திருநெல்வேலி கூட்டம் முடித்து 10:30 மணிக்குத்தான் வந்து இறங்கினேன். நேராக கோட்டைக்கு போயிட்டு ஒரு முக்கியமான ஃபைலை பார்த்துட்டு திரும்பி வந்துட்டு இப்பதான் சாப்பிட்டேன். இந்த பரபரப்பு எல்லாம் நீங்கதான் காட்டுறீங்க. நான் ஒன்னும் கவர்னர் வீட்டுக்கும் போகல, எங்கேயும் போகல. போனா போறேன்னு சொல்லிட்டு போறேன். இதுல என்ன இருக்கு.
அமைச்சர்களை மாற்றவும் நீக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. அமைச்சரவை மாற்றம் பற்றி செய்தியாளர்களுக்கு என்ன தெரியுமோ அதேதான் எனக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றம் பற்றி நீங்கள் முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது. திராவிட மாடல் காலாவதியாகவில்லை. ஆளுநரின் பேச்சு தான் காலாவதியாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் உடன் நான் வெளிநாடு செல்லவில்லை'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் ஓபிஎஸ்-டி.டி.வி.தினகரன் சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, ''டிவியில் பார்ப்பதாக'' கிண்டலாக துரைமுருகன் பதிலளித்தார்.