அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, 18ம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
முன்னதாக அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதனை ரத்து செய்யச்சொல்லி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், “பொதுக்குழு கூட்டியது செல்லும். பொதுக்குழுத் தீர்மானங்கள் குறித்து ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பொதுச்செயலாளர் வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், ‘ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளையும் வகித்துள்ளார். கட்சிக்கு மிக நெருக்கடி நேர்ந்த சமயங்களில் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது எனவும், எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த விளக்கமும் கேட்காமல் காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது’ என வாதிடப்பட்டது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர். இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கே விரோதமானது. இம்மாதிரியான முடிவுகள் கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கே விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மற்றபடி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பது போன்ற வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வைக்கப்பட்டு வாதிடப்பட்டது.
மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. இந்த குறிப்பிட்ட விதிகளில் விலக்கு பெற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.
தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்றும், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது. மக்களும் கட்சியினரும் விரும்புகின்றனர் எனக்கூறி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர கட்சியினர் இடையே எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தனி நீதிபதி வழங்கிய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன் அமர்வு, இந்த மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.