சட்டப்பேரவையில் இன்று, கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையாற்றினார். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாராகிவிட்டது எனவும், மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து மே மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் நேற்று பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியே சென்றதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிசாமி,''அதிமுக ஆட்சியில் 97 சதவிகித திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 2011-ல் இருந்து 2021 வரை அதிமுக ஆட்சியில் 1,764 அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அதில் 68 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 491 பணிகள் ஜீ.ஓ போட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் 1,658 பணிகள் நடைபெற்றன. இதில் என்ன தவறு இருக்கிறது. இத்தனை பெரிய விஸ்வரூபமாக எடுத்துள்ள முதலமைச்சர், சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என தவறான செய்தியை ஊடகங்களில் வைத்து, எங்களைக் குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்'' என்றார்.