விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். "இந்துக்கள்" என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது. (1)
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) November 20, 2019
இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் இந்துக்கள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை ரி-ட்வீட் செய்துள்ளார். அவர் தொடங்கியுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் ட்விட்டர் கணக்கில் வெளிவந்துள்ள ஒரு ட்வீட்டில் ’உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். ’இந்துக்கள்’ என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது. திருமாவளவன் அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது சாதி ஒழிப்பில் பின்தங்கிப் போனது, மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே நினைத்தது, பெரியாரை-அண்ணலை கொண்டு சேர்க்காதது.. என்பவற்றால் இன்று வலதுசாரித் தன்மை கொண்ட இரண்டு தலைமுறைகள் வளர்ந்திருக்கிறது. இவர்கள்தான் இன்று உண்மையாக இருப்பதை கூறியதற்கு கண்மூடித்தனமான அவதூறுகளை செய்பவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இதனை ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ளார்.
மேலும் ’ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமாவளவன் அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை’ என்ற ட்வீட்டையும் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.