தமிழகத்தில் குட்கா பொருட்களின் விற்பனைக்கு 2013ஆம் ஆண்டில் இருந்து தடை விதித்தனர். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை தமிழகத்தில் நடைபெற்று வந்தது. இதனை விற்பனை செய்வதற்கு மாநில அமைச்சர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில், குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் முன்னாள் அமைச்சர் ரமணாவிடமும் குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அப்போது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கும் மாதவராவ், சீனிவாச ராவிற்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் சிலரின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐ வேகம் காட்ட தொடங்கி உள்ளதால் அமைச்சர் விஜய் பாஸ்கருக்கும், அதிமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.