குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. தமிழகம் முழுவதும் பேரணி நடத்துகிறது. அதன்படி மார்ச் 01ல் தென்காசியில் குத்துக்கல் வலசையிலிருந்து கிளம்பிய பா.ஜ.க. ஆதரவுப் பேரணி, நகரின் புதிய பேருந்துநிலையம் வந்தடைந்தது.
தென்மாவட்டப் பொறுப்பாளர்கள், பா.ஜ.க.வின் மாநில து. தலைவரான நயினார் நாகேந்திரன், "பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முதலில் மைக்பிடித்த நயினார் நாகேந்திரன், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அவர்கள் எங்களுக்கு எதிராகவே பேசி வந்தவர்கள். பா.ஜ.க.வில் யாரும் எம்.எல்.ஏ.வாக, எம்.பி.யாக வேண்டும் என்று நினைத்தது கிடையாது. கடந்த பார்லிமெண்ட் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டது.
கோவையிலும், ராமநாதபுரத்திலும் பா.ஜ.க. வெற்றி பெரும் நிலையில் அவர்களின் பொய்யான அறிக்கையால் தி்.மு.க. ஜெயித்தது. உலக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் டிரம்ப் கூட மோடி கூப்பிட்டால் உடனே வருகிறார். சர்வசக்தியும் நமது பிரதமர் மோடியின் கையில் உள்ளது. தேவைப்பட்டால் பாகிஸ்தான் இந்தியாவோடு சேரும். நடக்குமா நடக்காதா என்பது வேறு விஷயம். அது எங்கள் ஆசை. சி.ஏ.ஏ. பற்றி மாவட்டத் தலைவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதில் இந்தியா எல்லா மதத்தினருக்கும் சொந்தம் தான். ஆனால் எல்லா நாட்டவருக்கும் சொந்தமல்ல" என்றார்.
பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் தன் பேச்சில், குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தை பாரதிய ஜனதா ரகசியமாக செய்யவில்லை. கடந்த முறை ஆட்சியில் இருந்த போது லோக்சபாவில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது ஆனால் ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாததால் அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி எதிர்க்கட்சிகள் அதை காலாவதி செய்து விட்டன. இந்த முறையும் ஆட்சிக்கு வந்தவுடன் கூடுதல் பலத்தை பெற்று 302 எம்.பி.க்களுடன் நிறைவேற்றினோம். ராஜசபையிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம். சட்டமாக்கினோம். மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்கள். கையொப்பமிட்டார் இனி ஒரு கொம்பனாலும் இதை அசைக்க முடியாது.
ராஜ்யசபாவில் போதுமான மெஜாரிட்டி இருப்பதால் அது நிறைவேற்றப்பட்டு விட்டது. இதில் எந்த ரகசியமும் இல்லை. இப்படி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கும் என்றால் பாராளுமன்றத்தை எதிர்ப்பதாக தானே அர்த்தம். பாராளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் மதிக்கவில்லை என்று தான் பொருள் என்றார்.