பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2004 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சிக் காலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு வந்தது.
இது தொடர்பாக இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் அவரது மகனான பீகாரின் தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பீகார் மாநில சட்டசபை கூடியது. அப்போது, சி.பி.ஐ தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், அவர் சட்டசபையில் இருந்த நாற்காலியை அடித்து உடைத்து, கையில் இருந்த காகிதங்களை வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க எம்.எல்.ஏ வின் இந்த நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, “இந்த வழக்கில் எனக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் நடந்தது என்பது கடவுளுக்கு தான் தெரியும். இரண்டாவது முறையாக நான் பதவி ஏற்கும் போது இந்த பிரச்சனையை ஏன் பா.ஜ.க கட்சி எழுப்பவில்லை” என்று கூறினார்.